Friday 31 July 2020

டாக்டர் அம்பேத்கர் மாநிலங்களவை உறுப்பினராக 1952ம் ஆண்டு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்?


Prof. Thanthai Sivaraj, Dr. Ambedkar Vs Dr. Syama Prasad (Jan Sangh)



How was Dr. Babasaheb Ambedkar elected as a member of the Rajya Sabha / Council of States in 1952?

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பினால் உண்மையாகிவிடும் என்ற நப்பாசையில் RSS / BJP அமைப்பு தொடர்ந்து பல்வேறு பொய்களை பரப்பிக்கொண்டு வருகின்றது. எத்தனை முறை உண்மையை கூறினாலும் அவர்களுக்கு உரைக்கவே உரைக்காது போல? அந்தப் பொய்களில் ஒன்றுதான் இது: "டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரை டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பாரதீய ஜன சங்கம் மூலம் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்." திட்டம்மிட்டே இந்த பொய்யை பரப்பிக்கொண்டு வருகிறார்கள். மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொய்யை 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டின் இறுதியில் திட்டம்மிட்டே பரப்பினார்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். குறிப்பாக தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதற்கு மறுப்பும் அப்போதே கொடுக்கப்பட்டது. இருப்பினும் ஒரு பொய்யை பரப்புவதின் மூலம் பாபாசாஹேப் அம்பேத்கரை தன்வசம் படுத்திவிடலாம் என்ற கற்பனையில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

அகில இந்திய SCF மற்றும் கூட்டணியும்:

நம் நாடு 1950, சனவரி 26 அன்று அதிகாரபூர்வமாக தன்னை குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு 1951-52ம் ஆண்டுகளில் நடந்த முதல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலில் பேராசிரியர் தந்தை சிவராஜின் தலைமையில் இயங்கிய "அகில இந்திய SCF" கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டது. 1946 தேர்தலில் தனித்து போட்டியிட்ட AISCF, 1951ம் ஆண்டு தேர்தலில் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசலிசக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. கூட்டணி அறிவிப்பை நவம்பர், 1951ம் ஆண்டு பாம்பேயில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்போது டாக்டர் அம்பேத்கர், திரு. நேரு அவர்களை சோசலிசக் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். இதற்கு முன்பு அக்டோபர் 6, 1951ல் டெல்லியில் பேராசிரியர் சிவராஜ் தலைமையில் நடைப்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் AISCF Manifesto (தேர்தல் அறிக்கை) குறித்து முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற்போக்கு அமைப்புகளான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் (டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கட்சி) போன்ற அமைப்புகளுடன் கூட்டணி இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர்தல் அறிக்கையின் நான்காம் பகுதியில் திரு. கிருபாளினியின் கிசான் மசுதூர் பிரஜா கட்சி (K. M. P. Party), திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசலிசக் கட்சி (Socialist Party), ஜஸ்டிஸ் கட்சி (Justice Party) போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளது என்று கூறியிருந்தது. பம்பாயில் சோசலிசக் கட்சியுடன் தேர்தலை சந்தித்தது AISCF. கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாததிற்கு காரணம், அவர்கள் அப்போது தனிப்பட்டவர்களின் சுதந்திரம் (Individual Freedom) மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை (Parliamentary Democracy) அழித்து அதற்கு பதிலாக எதேச்சாதிகாரத்தை (Dictatorship) கொண்டுவருவதை லட்சியமாக செயல்பட்டனர் என்பதே. மேலும் சர்வாதிகாரத்தில் AISCF நம்பிக்கை கொள்ளவில்லை என்பதும் ஒரு காரணம். டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கட்சியான ஜன சங்கதை பிற்போக்கு அமைப்பாக கூறப்படத்திற்கு ஒரு காரணம் இந்து சட்ட தொகுப்பு மசோதா தொடர்பான அவரின் எதிர் நிலைபாடு ஆகும். இவர் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட தொகுப்பு மசோதாவை கடுமையாக எதிர்த்தவர். நேருவின் அமைச்சரவையில் நான்கு ஆண்டுகள் கேபினட் மந்திரியாக இருக்கும் வரை இந்து சட்ட தொகுப்பு மசோதாவை பற்றி வாய்திறக்காத இவர் பின்பு 1951ல் கடுமையாக எதிர்த்தார்.

1952 தேர்தல் முடிவுகள்:

முதல் மக்களவைக்கான தேர்தலில் AISCF 35 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. கட்சியின் பொது செயலாளர் பாண்டுரங் ராஜ்போஜ் மற்றும் அன்றைய ஹைதெராபாத் மாநிலத்தை சேர்ந்த எம் ஆர் கிருஷ்ணன் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாக்டர் அம்பேத்கரும் (பம்பாய் வடக்கு தொகுதி) பேராசிரியர் சிவராஜும் (திருவள்ளூர் தொகுதி) தோல்வி அடைந்தனர். மாநில சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. அவைகள்: பம்பாய் - 1 (திரு. பி சி காம்ப்ளே), மெட்ராஸ் - 2 (திரு. போஜ்ஜா அப்பலசாமி மற்றும் திரு. தசரதன். எனது தர்மபுரி மாவட்டத்தின் அரூர் கூட்டுத் தொகுதியில் திரு. எம் கே மாரியப்பன் இரண்டாமிடத்தை பெற்று தோல்வி அடைந்தார்.), ஹைதராபாத் - 5 (வீராங்கனை ராஜாமணி தேவி, திரு. ராஜாராம், திரு. சந்திரா ராவ், திரு. ஷாம் ராவ் மற்றும் திரு. மாதவ் ராவ்), ஹிமாச்சல் பிரதேஷ் - 1, மைசூரு - 2 (திரு. பி எம் சுவாமிதுரை மற்றும் திரு. சிக்கலிங்கையா), பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் - 1 (திரு. மிஹான் சிங்). இதனின் தோல்விக்கு ஒரு காரணம் காஷ்மீர் தொடர்பான டாக்டர் அம்பேத்கரின் நிலைப்பாடு.

பம்பாய் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:

அன்றைய பம்பாய் சட்டமன்றத்தில் [இன்றுள்ள மேற்கு மகாராஷ்டிரா, கிழக்கு குஜராத் மற்றும் வடக்கு கர்நாடகம் பகுதிகள்] மொத்தம் 315 உறுப்பினர்கள் இருந்தனர். AISCF 27 பட்டியல் இன தொகுதிகளிலும் சில பட்டியல் பழங்குடி மற்றும் பொது தொகுதிகளிலும் மொத்தம் 37 தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் திரு. பி சி காம்ப்ளே மட்டுமே வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியான சோசலிசக் கட்சி ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் தனி பெரும் கட்சியாக 269 உறுப்பினர்களை கொண்டு மிக பெரிய வெற்றி பெற்றது. Peasants and Workers Party (PWP) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. PWP 14 உறுப்பினர்களையும் கம்யூனிஸ்ட் ஒரு உறுப்பினரையும் பெற்றது. PWPக்கு எதிர் நிலை கொண்ட Kamgar Kisan Paksha இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சையாக 18 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

பம்பாய் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் ஜன சங்கத்தின் நிலை:

1940-களின் முற்பகுதியில் இந்து மகாசபாவின் தலைவராக வகித்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி சில கருத்து முரண்பாட்டால் அதில் இருந்து 1948-ல் வெளியேறினார். பாரதிய ஜன சங்கம் என்ற புதிய கட்சியை தேர்தலுக்கு சற்று முன்பு 21 அக்டோபர் 1951இல் உருவாக்கினார். என்ன சுவாரிசம் என்றால் பம்பாய் சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்த ஜன சங்கம் அதில் 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு மீதியுள்ள 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் டெபாசிட் இழந்த கதையெல்லாம் தெரியாமல் போலி செய்தியெல்லாம் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் பாஜக / ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அன்றைய ஹூப்ளியில் (தற்போது கர்நாடகம்) ஜன சங்கம் சார்பாக போட்டியிட்ட திரு. ராமண்ணா கப்ஸி 4467 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதே தொகுதியில் AISCF சார்பாக போட்டியிட்ட திரு. பாரமப்பா குஸுர் 8740 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். பம்பாயில் பதிவான ஒட்டுமொத்த (1,11,23,242) வாக்குகளில் வெறும் 0.04% தான் 2 இடங்களில் போட்டியிட்ட ஜன சங்கம் பெற்றது. இந்த 0.04% வச்சிதான் அவங்க கதை கதையாக அளந்துவிட்டுட்டு இருக்காங்க. AISCF 3,44,718 (3.10%) வாக்குகளை பெற்றுது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே ஒரு இடத்தில் ஜன சங்கம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்டது. சரி சியாமா பிரசாத் முகர்ஜி முன்பு அங்கம் வகித்த இந்து மகாசபாவின் பரிதாப நிலையை பார்ப்போம். பம்பாய் நாடாளுமன்ற தொகுதிகளில் அது போட்டியிடவில்லை. இருப்பினும் பம்பாய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 35,194 (0.32%) வாக்குகளை பெற்று எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை. ஆக மொத்தம் பம்பாயில் எந்த முகாந்திரமும் இல்லாத இவர்கள் தான் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரை மாநிலங்களவைக்கு அனுப்பினார்களாம். கேலிக் குறியாக அவர்களுக்கு தோன்றவில்லை?

உண்மையில் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் மாநிலங்களவை உறுப்பினராக எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

1952ம் ஆண்டு பம்பாயில் இருந்து மாநிலங்களவைக்கு 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 17 இடங்களுக்கு 19 பேர் போட்டியிட்டனர். பம்பாய் சட்டமன்றத்தில் பெற்ற உறுப்பினர்களின் அடிப்படையில் காங்கிரஸ் 15 இடங்களிலும், AISCF மற்றும் PWP தலா ஒரு இடத்திலும், 2 சுயேட்சைகள் போட்டியிட்டனர். AISCF சார்பாக டாக்டர் அம்பேத்கர் போட்டியிட்டார். தேர்தல் 27 மார்ச் 1952ம் ஆண்டு நடைப்பெற்று ஏப்ரல் 1ல் முடிவு தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றிபெற்றது. அவர்களில் ஒருவருக்கு 19 நபர்களும், 10 பேருக்கு தலா 18 நபர்களும், 4 பேருக்கு தலா 17 நபர்களும் மொத்தம் 269 காங்கிரஸ் உறுப்பினர்களில் 267 உறுப்பினர்கள் வாக்களித்தனர். PWP சார்பாக ராஜாராம் ரவுத்துக்கு 18 பேர் வாக்களித்தனர். அவர்களில் 14 PWP, ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் சில சுயேட்சைகள் அடங்குவர்.

AISCF-க்கு 19 பேர் வாக்களித்தனர். அவர்களில் ஒரு AISCF (திரு. பி சி காம்ப்ளே), 9 சோசலிசக் கட்சி மற்றும் சுயேட்சைகள் அடங்குவர். மெட்ராஸ், ஹைதராபாத் மற்றும் மைசூரு மாநிலங்களவை தேர்தலில் தலா ஒரு இடத்தில் போட்டியிட்ட சோசலிசக் கட்சிக்கு AISCF ஆதரவாக வாக்களித்தது.

சுயேட்சை வேட்பாளரான சாந்திலால் மங்கள்தாஸுக்கு 9 பேர் வாக்களித்தனர். மீதியுள்ள ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு யாரும் வாக்களிக்கவில்லை.

பிறகு பாபாசாஹேப் 13 மே 1952ல் மாநிலங்களவையில் பதவி பிரமாணம் ஏற்றார். தான் இறக்கும் வரை மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்தார்.

Ambeth அம்பேத்.
Dharmapuri,
Tamil Nadu.
தாமரைகள் விழித்திருக்கட்டும் ! Om Mani Padmaye ! May the Lotuses Awake ! (Enlightenment).

No comments:

Post a Comment